பேரனாகிய குலோத்துங்கனைக் கங்கைகொண்ட சோழன் தேவி, தன்
மலர்க்கையால் எடுத்து,
'அவனிபர்க்குப் புரந்தரனாம் அடையாளம்
அவயவத்தின் அடைவே நோக்கி
இவன் எமக்கு மகனாகி இரவிகுலம்
பாரிக்கத் தகுவன் என்றே'
கூறினாளாக ஆசி்ரியர் கூறுகின்றார்.
இவன் பூணூல் அணிந்தானாகவும், வடமொழி மறை பயின்றானாகவும்,
ஆசிரியர் கூறுகின்றார். இதனால் அக்காலத்திய தஞ்சைச்சோழர் தம்மை
வடநாட்டுச் சத்தி்யரின் கால்வழியில் வந்தாராகவே கொண்டு, வடநாட்டுச்
சத்திரியருக்குரிய ஒழுக்கத்தைக் கைக்கொண்டும் வந்தாராதல் தெரிகின்றது.
ஆசிரியர் சயங்கொண்டாரும் சோழர் மரபு வரலாறு கூறுமிடத்துச்
சோழர்களின் முன்னோராக வடநாட்டுச் சத்திரியர் பலரைக் கூறுவதும்
ஈண்டு நோக்கத்தக்கது. இவரை அடுத்துச் சோழர் அவைக்களப்
புலவராகத் திகழ்ந்த ஒட்டக்கூத்தரும் தாம் பாடிய மூவர் உலாவிலும்,
சோழ மரபு கூறுமிடத்தும் இங்ஙனமே சோழரின் முன்னோராக வடநாட்டுச்
சத்திரியர் பலரைக் கூறுவதும் கருததக்கது. '.........................................முந்நூல்
பெருமார்பின் வந்தொளிரப் பிறப்பிரண்டா வதுபிறந்து சிறந்த பின்னர்'
எனவும், 'வேதங்கள் நான்கினையும் வேதியர்பால் கேட்டருளி மீண்டு கற்றே'
எனவும ஆசிரியர் கூறுமாறு காண்க.
இங்ஙனம் பூணூலணிந்தும், வடமொழி மறை பயின்றும் ஒழுகிய
தோடன்றிக் குலோத்துங்கன், வடநாட்டரசன் போன்று, மழைவளம் மிகுமாறு
பல வேள்விகள் நடைபெறுமாறும் செய்தான்.
'கருணையொ டுந்தன துபய கரமுத வும்பொருள் மழையின்
அரணியமந்திர அனல்கள் அவைஉதவும் பெருமழையே'
எனவும்,
'தாங்காரப் புயத்தபயன் தண்ணளியால் புயல்வளர்க்கும்
ஓங்கார மந்திரமும் ஒப்பில நூ றாயிரமே'
எனவும் வருமாற்றால் இது தெளியப்படும். மேலும்,
'உபய மெனும்பிறப் பாளர்ஏத்த
உரைத்த கலிங்கர் தமைவென்ற
அபயன் அருளினைப் பாடினவே'
என வருமாற்றால் இவன் புரிந்த பல செயலால் பார்ப்பனர் இவன்
ஆட்சியில் மகிழ்வெய்தி இருந்தனர் என்பது விளங்குகின்றது.
இனி, இவன் பல கலைத்துறைகளையும் கற்றுக் கைபோய
பேரரசனாய்த் திகழ்ந்திருந்தனன்.
'உரைசெய்பல கல்விகளின் உரிமைபல
சொல்லுவதென் உவமைஉரை செய்யின் உலகத்(து)
அரசர்உளர் அல்லரென அவைபுகழ
மல்குகலை அவை அவைகள் வல்லபிறகே'
என ஆசிரியர் கூறுமாறு காண்க. பின்னரும்,
'பௌவம் அடங்க வளைந்த குடைப் பண்டித சோழன் மலர்க்கழலில்
தெவ்வர் பணிந்தமை பாடீரே'
என வருமாற்றாலும் இதை உணரலாம். இவனுக்குப் பண்டித சோழன்
எனும் பேரும் உண்மை இதனால் குறிக்கப்பட்டதாம். இவன் இங்ஙனம்
பண்டித சோழனாய் விளங்கியமையின், பல்கலைத்துறையிலும் வல்லார் பலர்
இவன் அவைக்கண் வந்து தம் கல்வியைக் காட்டலும், இவன் அவர்
தகுதியறிந்து பாராட்டி அவர்களைத் தக்கவாறு பெருமைப்படுத்தலும்
இயற்கையேயாம். காளியின் திருமுன் தான் கற்ற இந்திரசாலங்களைக் காட்டி
நிற்கும் ஒரு முதுபேய் தான் கற்றவை யனைத்தும் எஞ்சாது காணவேண்டும்
எனக் காளியை இரந்து கூறலுற்றுக்,
'கொற்றவர்கோன் வாள் அபயன் அறிய வாளும்
குவலயத்தோர் கலையனைத்தும் கூற ஆங்கே
கற்றுவந்தார் கற்ற அவன் காணுமா போல்
கடைபோகக் கண்டருள்என் கல்வி என்றே'
மொழிந்ததாகக் கூறி ஆசிரியர் குலோத்துங்கனின் இவ்வியல்பை
நமக்குக் காட்டுகின்றார்.
இனி, இவன் இசைத்துறையிலும் கைபோகியவனாய் அத்துறையில் பல
நூல்களையும் இயற்றியிருந்தானென்று தெரிகிறது.
'வாழி சோழகுல சேகரன் வகுத்த இசையின்'
என வருமாறு காண்க. இவன் காஞ்சியில் செய்தமைத்த சித்திர
மண்டபத்தே அமைச்சரும், அரசரும் புடைசூழ வீற்றிருந்தபொழுது,
'தாள மும்செல வும்பிழை யாவகை
தான்வ குத்தன தன்னெதிர் பாடியே
காள முங்களி றும்பெறும் பாணர்தம்
கல்வி யிற்பிழை கண்டனன் கேட்கவே'
என்று கூறப்படுகின்றது. இதனால் இவன் இசைநூல் வகுத்திருந்தனன்
என்பதும், அவன் வகுத்த இசையைப் பாணர் அவன் முன்னேயே பாடிக்
காட்டினர் என்பதும், அங்ஙனம் அவர்கள் பாடியவிடத்துக் குலோத்துங்கன்
பிழை கண்டு கேட்டனன் என்பதும் ஈண்டுக் குறிக்கப்பட்டவாறு காண்க.
இதனால் குலோத்துங்கன் இசைக் கலையை முற்றக்கற்று முழுதுணர்ந்த
பேரறிஞனாவான் என்பது தெள்ளிதிற் புலப்படுகிறதன்றோ?
வீரராசேந்திரன் இவனை இளவரசில் வைத்தமையை,
'இசையுடன்எ டுத்தகொடி அபயன் அவ
னிக்கிவனை இளவரசில் வைத்த பிறகே'
என்னும் அடிகளில் குறிப்பித்தார் ஆசிரியர். இவன் இயற்கையிலேயே
வீரஞ்செறிந்த உள்ளத்தினனாய் இருந்தான் என்பது, இளவரசில் வைத்த
உடனேயே இவன் போர்
வேட்டெழுந்து வடதிசை நோக்கிச் சென்றமையால் விளங்கும்.
இளவரசில் வைத்த உடனே இவன்,
'திசைஅரச ருக்குரிய திருவினைமு
கப்பதொரு திருஉளம் அடுத்தருளியே'
என ஆசிரியர் கூறுமாறு காண்க.
இவன் வடதிசையை நோக்கிச் சென்று, போர்மேற்கொண்டிருந்த பொழுதே சோழ நாட்டில் வீரராசேந்திரன் இறந்தான்.
'மாவுகைத்தொருதனி அபயன் இப்படி
வடதிசை மேற்செல மன்னர் மன்னவன்
தேவருக் கரசனாய் விசும்பின் மேற்செல'
என்று இச்செய்தியைக் குறிப்பிக்கின்றார் ஆசிரியர். உடனே குலோத்துங்கன் சோழநாடடைந்து முடி சூடினன்.
இவன் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த இடம், இவன்
தாய்ப் பாட்டானாகிய கங்கைகொண்ட சோழன் இயற்றித் தலைநகராகக்
கொண்டிருந்த கங்கைகொண்ட சோழபுரமேயாம் என்று தெரிகிறது.
'கங்கா புரியின் மதிற்புறத்துக்
கருதார் சிரம்போய் மிகவீழ'
என, ஆசிரியர் குறிக்குமாற்றால் இஃது உணரப்படுகின்றது.
இவன் அரசு வீற்றிருக்கும் சிறப்பு, இவன் காஞ்சியில் செய்தமைத்த
சித்திரமண்டபத்தே வீற்றிருந்த சிறப்புக் கூறிய திறத்தால் ஒருவாறு உணரப்படும்.
இவன் சோழநாட்டினின்றும் காஞ்சி நோக்கிப் புறப்பட்ட சிறப்பு, இவன் பேரரசனாய்த் திகழ்ந்த தன்மையைப் புலப்படுத்தி நிற்கின்றது.
பேரரசனாய்த் திகழ்ந்த இவன் பொழுது போக்கிய தன்மையைக்,
'கலையினொடும் கலைவாணர் கவியினொடும்
இசையினொடும் காதன் மாதர்
சோழர்கள் வட இந்திய மரபு என்பதற்கு முறையான ஆதாரம் ஏதுமில்லை!பிராமண மேலாண்மையை ஏற்றுக்கொண்டனர் என்று வேண்டுமானால் கூறுங்கள் அதை ஏற்கிறேன்!ராமன்-இரவி குலத்தவன்,சோழரும் இரவி(சூரியன்) குலத்தவர் என்பது அமைச்சர்கள் சோழரை உயர்த்தக் கூறியவை ஆகும் அக்காலத்தில் தமிழ் மூவேந்தர்கள் வட இந்திய அரசரோடு மண உறவு கொண்டனர் என மகாபாரதம் பேசுகிறது!
ReplyDelete